ரமலானை வரவேற்கும் உதுமானியப் பழக்கங்கள்.

 ரமலானை வரவேற்கும் உதுமானியப் பழக்கங்கள்.


#துருக்கியர்கள் அதாவது #உதுமானியப் பேரரசுகளின் சமயத்தில் ரமலானை வரவேற்கவும் பிறரை மகிழ்ச்சிப்படுத்தவும் சில அனுஷ்டிப்புகளை அவர்கள் மேற்கொண்டார்கள். அவற்றில் 


1) #நகாரா அடித்தல் : - ரமலான் நோன்பிருக்கவிருக்கும் நபர்களை அதிகாலை 3 மணியளவில் எழுப்பி விடுவதற்கு நன்கு ராஜ உடை தரித்த ஒருவரை நியமித்து மக்களை உரிய நேரத்தில் விழிப்படைச் செய்ய  கொட்டுப்பறை அடிப்பார்கள். அவ்வாறு அடிக்கும் போது இஸ்லாமிய ஒழுக்கங்களை கற்பிக்கும் விதமான பாடல்களையும் அவர்கள் பாடிக்கொண்டு வருவார்கள்

(இந்தியா உட்பட அனைத்து தெற்காசிய நாடுகளிலும் இந்த நகாரா அடிக்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. உதுமானிய பேரரசின் தாக்கம் என்பதாக இதனை அறியலாம். தமிழகத்தில் நோன்பு திறப்பதற்கும் நகாரா அடிப்பார்கள்.)


2) #பிள்ளை நோன்பு : - குழந்தைப் பருவத்தில் இருப்பவர்களை நோன்பு வைக்க ஆர்வமூட்டுவதற்காக பசி பொறுக்காத பிள்ளைகளை ரகசியமாக அழைத்து நண்பகல் நேரத்திலேயே உணவை கொடுத்து உண்ணச்செய்துவிட்டு, என் குழந்தை நோன்பு பிடித்தது என்பார்களாம். ரகசியமாக தனக்கு தரப்பட்ட உணவை உண்ணாமல் முழு ஈமானுடன் நோன்பு வைத்த பிள்ளைக்கு வீட்டிலுள்ள அனைவரும் பரிசு கொடுத்து மகிழ்வார்களாம்.


3) #விளக்குகளால் அலங்கரிப்பது : - ரமலான் நெருங்கிவிட்டது என்றாலே நம்மில் அனைவரும் வீடு,வாசல்,கடைகள்,வாகனம் என அனைத்தையும் சுத்தப்படுத்தி அழகுபடுத்துவோம். சில முஸ்லிம்கள் ஒவ்வொரு ரமலானுக்கும் வீடுகளுக்கு புது வர்ணம் தீட்டுவார்கள் , பள்ளிவாசல்களும் இதற்கு விதிவிலக்கல்ல, பள்ளிவாசலின் உயர்ந்த கோபுரங்களில் விளக்குகள் ஒளிரவிட்டு குர்ஆன் வசனங்களில் சிலவற்றை அதில் எழுதி வைப்பதும் , ரமலான் விளக்குகளை வாங்கி வீட்டில் கட்டிக்கொள்வதும் துருக்கியர்களின் பழக்கமாய் இருந்துள்ளது.அதற்கு அவர்கள் மொழியில் மஹ்ய என்று பெயராம்.


4) #கரகோஸ் - #ஹகிவத் : - ரமலான் மாதம் முழுக்கவும் இரவில் தெருக்களில் குர்ஆனில் வரும் நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளையும் நபி முஹம்மது ஸல் அவர்களின் வாழ்க்கை முறையையும் காகித்தில் பொம்மைகளாக செய்து அதனை திரைக்குப்பின்னால் இருந்து இயங்கி பப்பட் ஷோ காட்டுவார்களாம். இன்றைய கார்ட்டூன் காட்சிகளை போல.


5) #பிடா ரொட்டி : - ரமலானுக்கு மிக நெருக்கமான உணவுகளில் இந்த பிடா ரொட்டிக்கு மிகப்பெரிய வரவேற்பும் இப்போதும் அரபு நாடுகளில் உள்ளது. மாவு,சீனி,பால்,நெய் ஆகியவை சேர்த்து சுவையாக தயாரிக்கப்படும் இந்த ரொட்டி நோன்பு வைக்கவும் நோன்பு திறக்கவும் இருண்டுக்கும் வாங்கி உண்ணப்படுமாம். சென்னையில் ஷபே-பராத், ஷபே-மிஹ்ராஜ் தினங்களில் மட்டும் ஐதராபாத்தில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு வரும் இவ்வகை ரொட்டியை பலரும் பள்ளிவாசல்களுக்கு அருகில் விற்றுக்கொண்டிருப்பார்கள். மற்ற நாட்களில் பேக்கிரியில் கிடைக்கும் அந்த ரொட்டிக்கு அந்த நாட்களில் கிடைக்கும் ரொட்டியின் ருசிக்கு ஈடாகாது.


6) இலவச உணவு : - பணம் படைத்தவர்கள் பேக்கரி மற்றும் சஹர் உணவு விற்பனை செய்யும் உணவகங்களுக்கு முன்கூட்டியே நன்கொடை கொடுத்து #சஹர்-இஃப்தார் ஆகிய இரண்டிற்கும் வரும் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்க செய்யும் ஏற்பாடு இது. இந்தியாவில் இப்போது தான் அப்படியான பழக்கங்கள் நம்மிடையே பரவி வருகிறது. 2008இல் மலேசியாவில் நான் இருந்த போது நோன்பு திறக்கும் நேரங்களில் தேநீர் விடுதி மற்றும் சிறிய ரக உணவகங்களில் நோன்பு திறப்பவர்களுக்கென்று மூன்று பேரீச்சம்பழமும், ஒரு பழச்சாறு போத்தலும் ஒரு குவளை நீரும் வைக்கப்பார்கள். தமிழகத்திலும் பல பெரிய ஜவுளிக்கடைகளில் நோன்பாளிகளுக்கான இஃப்தார் உணவுகள் ஏற்பாடு செய்யப்படுவது நம் நாட்டின் சமய நல்லிணக்கத்தை பறைசாற்றுவதாய் உள்ளது. 


7) #இஃப்தார் விருந்து : - பெரிய தனவந்தவர்கள் நடத்தும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆகும். துருக்கிய பேரரசில் அரசராக இருப்பவர் ரமலானில் ஒரு நாளை தேர்ந்தெடுத்து நாட்டிலுள்ள அனைவருக்கும் இஃப்தார் விருந்து வழங்குவார். பலவகையான உணவுப்பண்டங்களை உண்ணாமல் வாடும் ஏழைகளுக்கு அந்த விருந்து பெரும் மனமகிழ்வினைக் கொடுக்கும். அரசர் பின்பற்றியதை அடுத்து அங்கு அடுத்தடுத்த நிலையிலுள்ள இளவரசர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் அவரவர் சக்திக்கு தகுந்தபடி விருந்து வழங்கப்பட்டு, வேற்று நாட்டு தூதர்கள், அரசு அதிகாரிகளுடனான நட்பினை பலப்படுத்த ஒரு வாய்ப்பாய் இது அமையும் . நம் நாட்டிலும் அரசியல் கட்சித்தலைவர்கள் இஃப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.


8) ரமலான் #பரிசு வழங்குதல் : - ரமலான் மாதத்தில்  முஸ்லிம்கள் தங்களது சொந்தபந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசுப்பொருட்களைக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவார்கள் , வெள்ளித்தட்டு, தங்க நாணயம், ரத்தினக்கற்கள் பொதிந்த வெள்ளி மோதரங்கள், மணிகள் உள்பட பேரீத்தம் பழங்கள், உலர் பழங்கள் ஆகியவற்றை #வெல்வட் துணிகளில் பொதிகளாக தைத்து அவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்களாம். நமக்கு பேரிச்சம் பழம் தான் கொடுக்க முடிகிறது தங்க காசுலாம் எங்க கொடுக்க?


9) #முக்காபலா : - ரமலான் மாதம் முழுக்க பள்ளிவாசலில் இருந்து குர்ஆன் முழுவதையும் முடிந்தளவு  பல தடவை ஓதி முடிப்பது. அவ்வாறு குர்ஆன் ஓத வரும் சிறுவர் சிறுமியருக்கு பள்ளிவாசல் சார்பாக பரிசுகள் வழங்கப்படும்.


10) #ஹுஸூர் ஏ ஹுமாயூன் : -

ரமலான் மாதம் முழுக்க குழுக்களாக   பள்ளிவாசல், வீடுகள், மதரஸாக்கள், மாளிகைகள் ஆகியவற்றில் அமர்ந்து மார்க்கம் குறித்த விஷயங்களை பேசுவார்கள், மார்க்க அறிஞர்களிடம் மக்கள் தங்களது இஸ்லாம் குறித்த சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு தகுந்த பதில் பெற்றுக்கொள்வார்கள், சிலநேரம் உலக விஷயங்களை குறித்தும் பேசிக்கொள்வார்கள். இதில் டோப்காபி அரண்மனையில் நடக்கும் நிகழ்வு மட்டும் ஹுஸூர் ஏ ஹுமாயூன் எனப்பட்டது. இங்கு முஸ்லிம்கள் மாத்திரமல்லாது முஸ்லிமல்லாதவர்களும் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு வருவார்களாம். ரமலானின் சஹர் நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாக இந்த பழக்கம் இன்னும் கூட நம்மிடையே உயிர்ப்புடன் உள்ளது மகிழ்ச்சிக்குறியது.


இன்று தமிழ் முஸ்லிம்கள் ரமலான் மாதம் என்பதை பரவலாக ரம்ஜான் என்கிறார்கள், அதுவும் துருக்கியர்கள் #ரமஸான் என கூறியது தான். ரமஸான் என அவர்கள் உச்சரித்ததை நாம் ரம்ஜான் என்கிறோம். பொதுவாக உதுமானிய கிலாஃபத்தினை ஆங்கிலத்தில் ஒட்டோமன் என்பார்கள், ஆனால் துருக்கியர்களோ ஒஸ்மான்லி என்று தான் கூறுகிறார்கள். அரபுகள் ஜமீலா எனக்கூறுவதை துருக்கியர் கெமிலா என்கின்றனர். ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அப்படியே கெமிலியா என அழைக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog